ஶ்ரீ அத்தனூர் ஆயி, செல்லக்குமாரசாமி, குப்பண சாமி சரித்திரம்
ஸ்ரீ செல்லக்குமாரசாமி சரித்திரம்:
செல்லகுமாரசாமியானவர் முருகரின் அவதாரம் ஆவார்.
பார்வதி தேவிக்குச் சிவபெருமான் பிரணவ மந்திரமான ஓங்காரத்தின் பொருளைச் சொல்லும் பொருட்டு குழந்தையான முருகனை விட்டுவிட்டுத் தன் அருகில் வந்து உபதேசம் பெறுவதற்கு அழைத்தார். அப்போது முருகப்பெருமான் வண்டு வடிவமெடுத்து பார்வதி சிவனிடம் உபதேசம் பெரும்போது அதனைப் பார்வதியின் கூந்தலில் மறைந்து இருந்து ஒட்டுக்கேட்டார். அதை கண்டு கோபமுற்ற சிவபெருமான் முருகனை பூலோகத்தில் பிறக்குமாறு சாபமிட்டார்.
வாழவந்தி நாட்டு (http://kongupattakarars.blogspot.com/2011/03/10.html?m=1) மோகனூர் நாட்டாரான மணிய கோத்திரத்தார், கொங்கதேசத்தில் மூன்றாம் நாடான காங்கயநாட்டில் (http://kongupattakarars.blogspot.com/2011/03/3.html?m=1) முத்தூரில் காணியாட்சி பெற்று வாழ்ந்து வந்தனர்.
காணியாளரான கங்கை குலம் மணிய கோத்திரத்து செல்லப்பகவுண்டர் உடலில் சாபத்தின்படி முருகபெருமான் வந்திறங்கி பத்து மாதங்கள் கருவுற்றுச் செல்வம் ஓங்கி பிறந்ததால் செல்வக்குமாரர் என்று மகனுக்கு பெயரிட்டு வளர்த்தார்.
ஆறு சாஸ்திரம் பதினெண் புராணங்கள் கலை ஞானம் ஆகியவற்றைக் கற்று மந்திர உபதேசமும் பெற்று சித்தராக விளங்கினார் செல்வக்குமாரர். ராசிபுரம் அத்தனூர் ஆயியைத் தனது உபாசனைக் காளியாகக் கொண்டு பணிவிடைகள் செய்து வந்தார். காணிகள்தோறும் ஆயி, அத்தாயி, அத்தனூராயி என்ற பெயர்களைக்கொண்டு தாய் விளங்குகிறாள்.
இந்திய சர்க்காரது HR&CEயால் இடிக்கப்பட்டுவிட்ட பழைய ஆதி அத்தனூர் அம்மன் கோயில், அத்தனூர்
உலகத்தார் வியாதிகளை தீர்த்து வந்தார் சித்தரான செல்லக்குமாரர். தனது மாடுகளை ஓட்டிக்கொண்டு செஞ்சேரிமலையில் சித்தராக வாழ்ந்து வந்த காலத்தில் மழை பெய்யாமல் பஞ்சம் ஒன்று வந்தது. அப்போது பூந்துறை சேமூருக்கு வந்து அங்கே மாடுகளை மேய்த்து உணவு உண்பதை நிறுத்தி பால் மட்டும் அருந்தி பாசுபத விரதியாகி உலகத்தோர் துயரங்களைத் தீர்த்து வந்தார்.
இதனைச் சுருக்கமாக
" பிறந்தது புகழூர், இருந்தது முத்தூர்,வளர்ந்தது சேமூர், சித்தி சேர்ந்தது செஞ்சேரி"
என்று பாடுகின்றனர்.
ஸ்ரீ குப்பணசாமி கதை:
ஶ்ரீ செல்லக்குமார சாமியின் மணிய கோத்திரத்தாருக்குக் குலகுருவாக விளங்கிவரும் முத்தூர் மங்கலப்பட்டி மடாதிபதி (https://kongukulagurus.blogspot.com/2009/09/14.html?m=1), தன் கைகளால் குப்பண சாமிக்கு பூஜை செய்யும் காட்சி. மடத்தின் ஆன்மார்த்தத்திலும் இவர்கள் பூஜையில் உள்ளனர். தற்போது இந்திய சர்க்காரது HR&CEயால் இடிக்கப்பட்டுவிட்ட செல்லக்குமாரசாமி காலத்துத் தொன்மையான கோயில் இது.
கிருஸ்து வருடம் 1486 ஆம் வருடம் ஆனி மாசம் ஏழாம் தேதி மக நட்சத்திரம் சதுர்த்தி வியாழக்கிழமை கொங்கராயன் காங்கய நாடு வள்ளியறச்சல் மாந்தபுரத்தில் புகுந்து வெட்டிக்குத்தி கொள்ளையடித்து ஆடு மாடு பிடித்துக்கொண்டு சென்றான்.
அப்பொழுது குடிமக்கள் தாராபுரத்தில் விஜயநகர அதிகாரியாக இருந்த உம்மத்தூர் நஞ்சராய உடையாரிடம் சென்று முறையிட்டனர். அவர் காங்கய நாட்டுக்கு அக்காலத்தில் பட்டக்காரராக இருந்த காடையூர் முழுக்காத பிறழந்தை கோத்திர இம்முடி குமார் காங்கய மன்றாடியாரிடத்தில் இதனை விசாரிக்குமாறு அப்பணை செய்தார். காடையூர் மன்றாடியாராகப்பட்டவர் கொங்கராயனைப் பிடித்து அவன் தலையைக் கொண்டு வருபவர்களுக்கு தன்னுடைய மன்றாடி பட்டத்தையும் தனது சமஸ்தானத்தில் பாதியையும் வழங்குவதாக அறிவித்தார். இதைக் கேட்ட வள்ளியறச்சல் பில்ல கோத்திரத்துத் தொண்டமாக்கவுண்டன் என்பவர் தன் மகன் மாந்தகவுண்டனுடனும், வள்ளியரச்சல் காவல் பெரிய தம்பி கவுண்டன் மகன் பெரியண கவுண்டனுடனும், நத்தக்காடையூர் மணிய கோத்திர ராவுத்த கவுண்டன் மகன் வாரணவாசி கவுண்டனுடனும், கன்னப்பரையர்களை கூட்டிக்கொண்டு கொங்கராயனை விரட்டிச் சென்றார்கள்.
1496 ஆம் வருடம் மிருகசீரிஷ நட்சத்திரம் பூர்வ பட்சத்து திரயோதசி இரவில் குப்பன் தலைமையிலான கன்னப்பறையர்கள் தளி கோட்டைக்குள் கன்னமிட்டுக் கொடுத்தானர். வள்ளியரச்சல் தொண்டமாக்கவுண்டன் கோட்டைக்குள் சென்று கொங்கராயன் தலையை வெட்டி முக்குறுணி தாலியையும் அறுத்து எடுத்து வந்தான்.
அப்போது கொங்கராயன் மனைவியர் மூன்று பேர் உடன் கட்டை ஏற வரங்கொடுக்குமாறு தொண்டமாக்கவுண்டனைக் கேட்டுக்கொண்டதால் அவர்களையும் வீரமாத்தி செய்து வைத்தான். மேலும் கோட்டையின் வாளரசு பிள்ளையாரையும் தூக்கி கொண்டு காடையூர்க் காங்கய மன்றாடியிடம் விரைந்தான்.
அச்சமயத்தில் குப்பன் தலைமையிலான கன்னப்பறையர் சுரங்கம் இடிந்து விழுந்து வீர சொர்க்கம் புகுந்தனர். குப்பன் உயிர் பிரிகையில் நாட்டினிலே செல்வகுமாரருக்கு நான் அடிமை என்று கூறினான்.
இதனால் செல்லக்குமாரரது அடிமையாக அந்நாள் தொட்டுக் கன்னமிடும் கடுங்கோலை ஆயுதமாகக் கொண்டு வியாதிகளைத் தீர்த்து ஏழுபிறவித் துன்பங்களை நீக்கியருளும் தெய்வமான குப்பணசாமியாக விளங்கிவருகிறார். மேற்கண்ட நான்கு நாட்டுக் கொங்க வெள்ளாளர், பெருந்தாலி வேட்டுவர் உள்ளிட்டோர் இவர்களைக் குலதெய்வங்களாக வழிபட்டு வருடந்தோறும் பொங்கல் வைக்கின்றனர். குப்பணன் பறையராதலால் அவருக்கு மட்டும் ஆடு, கோழி பலியிட்டு வணங்குகின்றனர். மொடக்குறிச்சி சுற்றுவட்டாரத்தில் பொங்கல் அன்று அவரவர் கட்டுத்தரைகளில் குப்பயணன் கல் என்ற எதிரடி ஒன்று நாட்டி அதன்மேல் பலி ரத்தத்தினை விட்டு பொங்கல் வைக்கின்றனர்.
பிற்சேர்க்கை:
தொண்டமாக்கவுண்டன் கொங்கராயன் தலையுடன் காடையூர் செல்லும் வழியில் காரையூரில் இருந்த அவரது மருமகனான அளகன் சர்க்கரை, தொண்டமாகவுண்டனது மேலிருந்த இரத்தக்கறைகளை கழுவி வருமாறும், கொங்கராயன் தலையை அதுவரை தான் பிடித்து இருப்பதாகவும் கூறினான். நத்தக்காரையை கழுவிய இடம் ஆதலால் அன்று முதல் கரையூர் நத்தக்காரையூராக மாறியது. கறைகளை கழுவிக்கொண்டு இருந்தபொழுது மருமகனான அளகன் சர்க்கரை தந்திரமாக தலையை எடுத்துக்கொண்டு காடையூர் மன்றாடியாரிடம் கொடுத்து அளகன் சர்க்கரை மன்றாடியார் என்ற பட்டத்தையும் பாதி சமஸ்தானமான நத்தக்காடையூர், மருதுறை, முத்தூர், வள்ளியறச்சல் , பாப்பினி , தோடைபிரிவு ஆகியவற்றை பெற்று பழையகோட்டைப் பட்டக்காரர் ஆனான். இப்படித்தான் பழையகோட்டைப் பட்டம் உண்டானது. இதையறிந்த தொண்டமாக்கவுண்டன் காடையூரில் முறையிட்டதால் அவனுக்கு சமாதானமாகத் தொண்டமா மன்றாடி என்ற பட்டப்பெயர் கொடுக்கப்பட்டது.
காடையூர் பட்டக்காரர் கைபீது புத்தகம் (மெக்கின்சி ஆவணங்கள் (1800), கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், மதறாஸ்) கையெழுத்துப் பிரதியும், தற்காலப்படியும்.
Comments
Post a Comment